‘நந்தன்’ – விமர்சனம்
இயக்குனர் நடிகர் சசிகுமார் தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் நடித்திருக்கும் படம் தான் நந்தன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது ஒரு கிராமம். பொது பஞ்சாயத்து தொகுதியாக உள்ள இந்த கிராமத்தில் சில பல அரசியல் காரணங்களால் தலித்துகள் மட்டுமே போட்டியிடும் தனி (Reserved) பஞ்சாயத்து தொகுதியாக இது மாற்றப்படுகிறது. அதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த ஜாதிய உணர்வு கொண்ட தலைவர் தன்னிடம் அடிமை போல வேலை செய்யும் தலித் சமூகத்தை சேர்ந்த குழுவானை என்றழைகப்படும் அம்பேத் குமார் (சசிகுமார்) என்பவரை எந்த போட்டியும் இல்லாமல் தலைவராக்குகிறார்.
சசிகுமாருக்கு இப்பட நடிப்புக்காக இந்த வருடம் தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளது. பல படங்களில் ஸ்டைலிஷாக, ஆக் ஷன் காட்டும் சசி, நந்தனார் எப்படி வாழ்ந்திருப்பாரோ அதை அப்படியே உணர்ந்து நடித்திருக்கிறார். கருப்பான தோற்றத்தில், அழுக்கான உடையில் வரும்போதும், வேஷ்டி கட்டிக்கொண்டு கம்பீரமாக வலம் வரும்போதும், அவமானபடுத்தப்படும்போதும் சசிகுமாரை இயக்குநர் சரியாகப் பயன்படுத்தி உள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. ஊர் முன்பு அவமானப்படுத்தப்படும் காட்சியில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு ஜாதி திமிர் பிடித்த ஊராட்சி தலைவராக, உள்ளே ஒன்று பேசி வெளியே வேறு மாதிரி நடந்துகொள்ளும் பெரிய மனிதன் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்தி போகிறார் டைரக்டர் பாலாஜி சக்திவேல்.
படம் முடிந்த பின்பு தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட தலித் பஞ்சாயத்து தலைவர்களை பேச வைத்திருப்பது கொஞ்சம் ஆறுதல் தருகிறது. ஜிப்ரானின் இசை தாலாட்டாக உள்ளது. நேதாஜி, அம்பேத்கர், காந்தி போன்ற தலைவர்களை பேக் ட்ராப்பில் காட்டும் இயக்குநர், ‘சமூக நீதிக்காகப் போராடிய பெரியாரை’ காட்டவில்லை. இயக்குநர் டைட்டிலில் சொல்வது போல இப்படியும் நடக்கிறது என்பதை அந்த இடத்திற்கே சென்று காட்ட முயற்சி செய்திருக்கிறார். ஆனால், இன்னும் அதிக முயற்சி எடுத்திருக்கலாம்.